ஆர்க்டிக் பனி அடுக்குகள் 13.1 சதவீதம் காணாமல் போவதாக நாசா கூறுகிறது.

 

ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயற்கையான வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்படும் பிரச்சனை உண்மையிலேயே புவிக் கோளுக்கு கவலைக்குரிய செய்தி.

 

ஒவ்வொரு பத்தாண்டும் ஆர்க்டிக் பனி அடுக்குகள் பரவிக் கிடக்கும் பகுதியில் குறைந்தது 13.1 சதவீதம் காணாமல் போவதாக அமெரிக்காவின் விண்வெளி முகமையான நாசா கூறுகிறது. இது 1981 முதல் 2010 வரையான ஆண்டுகளின் சராசரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆர்க்டிக் பகுதியில் பனி அடுக்குகள் சுருங்குவதற்கு, மனிதர்கள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாக சேர்வதுதான் முதன்மையான காரணம் என, கடந்த 2007ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழுவின் நான்காவது மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

வெப்பம் அதிகரித்து வரும் புவியில், காணாமல் போகும் கடல் பனி அடுக்குகள், பூவிப் பரப்பின் சராசரி வெப்ப நிலை அதிகரிக்க காரணமாகும். இந்த பனி அடுக்குகள் 80 சதவீத சூரிய ஒளியை எதிரொலிக்கின்றன. இதனால், சூரிய ஒளி புவியை வெப்பமாக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது.

கடல் பனி அடுக்குகள் உருகும் போது, பெருங்கடல்களில் மேற்பரப்பின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுகிறது. பெருங்கடல்கள் 90 சதவீத சூரிய ஒளியை உள்வாங்கிக் கொள்கின்றன. அது ஒட்டுமொத்த வட்டாரத்தையும் சூடாக்குகிறது. இதை ஆங்கிலத்தில் அல்பெடோ எஃபெட் (Albedo Effect) என்கிறார்கள்.

வெளிர் நிறங்கள் வெப்பத்தை எதிரொலிக்கும், அடர் நிறங்கள் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் என்கிற எளிய தத்துவத்தால் இந்த விளைவு ஏற்படுகிறது.

 

ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உறைவதும், உருகுவதும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் ஒரு விஷயம். மார்ச் மாதங்களில் உறைந்து கிடக்கும். செப்டம்பர் மாத காலத்தில் உருகிய நிலையில் இருக்கும்.

 

ஆர்டிக் கடல் பனி அடுக்குகள் சுருங்கி வருவதாக களத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட தரவுகள் மற்றும் செயற்கைக் கோள் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

 

கடல் பனி அடுக்குகள் சுருங்குவதால், பெருங்கடல் பரப்புகள் அதிக வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கின்றன. எனவே இது ஒட்டுமொத்தமாக நிலப்பரப்புகள் மற்றும் கடல்களை அதிகம் வெப்பமடையச் செய்கின்றன.

 

பனியால் மூடப்பட்டிருக்கும் பகுதிகள் குறைந்து, நேரடியாக சூரிய ஒளி படும் பகுதிகள் அதிகரித்து வருவது, ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

இதனால்தான் புவியை சூழ்ந்த வளிமண்டலத்தின் வெப்ப நிலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கிறது. அது அபாய அளவை எட்டிய பிறகு மனிதர்கள் என்ன தான் முயற்சி எடுத்தாலும் அதன் வெப்ப நிலையை மாற்ற முடியாமல் போகிறது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.