ஸ்ரீ பால திரிபுரசுந்தரி எனும் வாலைக்குமரி!

 


ஸ்ரீ குருப்யோ நமஹ!!!

ஸ்ரீ பால திரிபுரசுந்தரி எனும் வாலைக்குமரி!

வாலை என்றால் அழியாத கன்னிகை என்று அர்த்தம். வாலை என்பது குண்டலினியை குறிக்கும் மறைபொருளாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழிலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் பருவங்களில் 9 வயது பருவத்திற்கு 'வாலை பருவம்' என்று பெயர்.

ஸ்ரீபாலாவின் தோற்றம்:

ஸ்ரீபாலாம்பிகையே ஆதார சக்தி. ஜகன் மாதாவான ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி தன்னுடைய சக்தியாக தன் உடலில் இருந்து, ஒன்பது வயது சிறிய பெண்ணாக  'ஸ்ரீபாலதிரிபுர சுந்தரி' யை தோற்றுவித்தாள். பண்டாசுர வதத்தின் பொழுது பண்டனின் புதல்வர்களான 30 பேரை  எதிர்த்து போருக்குப் புறப்பட்டாள் குழந்தை பாலா திரிபுரசுந்தரி . 30 பேரையும் அழித்து அன்னையையும், அனைவரையும் மகிழ்வித்து ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் உள்ளே ஐக்கியமானாள்.

'ஸதா நவ வர்ஷா-

ஸதா - எப்பொழுதும்

நவ வர்ஷா - 9 வயது

ஸ்ரீ பாலா வெள்ளைத் தாமரை மலரில் நான்கு கரங்களுடனும்,  அதி அற்புதமாய் பிரகாசிக்கும் முகத்துடன், நான்கு கைகளுடனும் காட்சியளிக்கிறாள்.  ஒரு கையில் ஜெபமாலை நம்மை எப்பொழுதும் இறையின் நாமத்தை ஜெபிக்க சுட்டிக்காட்டும்(மனக்குவிதல்). மற்றொரு கையிலுள்ள புத்தகம் அவளை துதிப்பவர்க்கு நல்ல ஞானத்தை  கொடுப்பதைக் குறிக்கும்.  மற்ற இரண்டு கைகள்  அபயஹஸ்தம் மற்றும் வரத ஹஸ்தம். அன்னை  தனக்கு பிரியமான  குழந்தை வடிவான ஸ்ரீ பாலாம்பிகையாக  அனைவருக்கும் அருள்கிறாள்.

குழந்தை பருவம்  என்பது அனைவருக்கும் மிகப் பிரியமான  பருவம் . யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடும் குணம் குழந்தைகளுக்கு உரித்தானது. சாதாரணமான குழந்தைகளுக்கே அப்பண்பு இருக்கும்போது தெய்வக்குழந்தையாம்  பாலாம்பிகை பக்தர்கள் கேட்கும் அனைத்து நல் வரங்களையும் அளிக்கக் கூடியவள்.

சித்தர்களின் வழிபாட்டில் பாலாம்பிகைக்கு முக்கிய பங்கு உண்டு. ஏறத்தாழ அனைத்து சித்தர்களும் வாலைக்குமரியாக பாலாம்பிகையை வழிபட்டு அட்டமா சித்திகளை அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஓம்காரத்தை தம் உடலில் இனம்கண்டு, அதன் வழிநின்று சித்தி அடைவதுதான் வாலை பூஜையின் நோக்கம். உன்மனீ  எனும் இடத்தில் ( நெற்றிப்பொட்டிற்கு சற்று மேலே )  அன்னையை நினைத்து வழிப்படுவதால் அவளுக்கு 'மனோன்மணீ' என்ற பெயரும் உண்டு.

உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அன்னைக்கு இணையான வல்லமை கொண்ட பாலாம்பிகையை வணங்குவோருக்கு சகல சௌபாக்கியங்களும் அருள்பவள். நல்ல வாக்கு வன்மை உண்டாகும். குழந்தைகள் பாலாவை வணங்கும்போது அவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். இனிப்பு பண்டங்கள், சாக்லேட் முதலியவை  நைவேத்தியமாக வைத்து  பக்தர்கள் பாலாவின் அருளுக்கு பாத்திரமாகிறார்கள்.

 விகல்பம் இல்லாத குழந்தை மனதுடன் "பாலா" என்று நாம் அழைத்தாலே போதும்,  கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து நம்மை ரக்ஷிக்கும் குழந்தை பாலாம்பிகை.

அன்னை பராசக்தியே சந்திரனின் அதிதேவதை. அவளின் ரூபமான ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் திரு நட்சத்திரம் ரோகிணி . ரோகிணி நட்சத்திரத்திலேயே சந்திரன் உச்சம் அடைகிறது.   ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில்  அமைந்து இருந்தால் அவருக்கு எளிதாகவே அம்பிகையின் அருள் கிடைக்கும். அவ்வாறு இல்லாதவர்கள் அதாவது சந்திரன் வலிமை இழந்தவர்கள்  ஸ்ரீ பாலாவை வணங்கி வந்தால் அவர்களுக்கு மனோபலம் கிடைக்கும். சந்திரனால் கிடைக்கப்பெறும் நன்மைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கும்.

"முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல

மண்டல வாசிப் பழக்கத்திலே

அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை

அமர்ந்தி ருக்கிறாள் வாலைப்பெண்ணே!"

                              -வாலைக்கும்மி

ஸ்ரீபாலாவின் திருக்கோவில்கள்:

1. வேலூர் மாவட்டம் 'நெமிலி' என்னும் இடத்தில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி வீற்றிருக்கிறாள்.

2. கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் அன்னை பகவதியை வாலையாக ஸ்ரீகாகபுஜண்டர், முதற்கொண்டு ஏராளமான சித்தர்கள் பூஜித்துள்ளனர்.

3. புதுச்சேரியில் திண்டிவனம் சாலையில் இரும்பை என்ற இடத்தில் ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோவில் உள்ளது.

4. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் செம்பாக்கம் என்னும் இடத்தில் ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயம் உள்ளது.

நன்றி

பத்மபிரியா பிரசாத்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.