அட்சய திருதியை!

 


அட்சய திருதியை!

பிரதி வருடம் சித்திரை மாதம் வளர்பிறை திருதியையை அட்சய(அக்ஷய) திருதியையாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 14-5-2021 அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.  'அக்ஷய' என்ற சொல்லிற்கு நீடிக்கக் கூடியது, குன்றாதது, வளர்வது என்று பொருள்.  அக்ஷய திருதியை அன்று நிகழ்ந்த நிகழ்வாக நம் புராணங்களில் கூறப்பட்டிருப்பதை கீழே காணலாம்

அக்ஷயதிரிதியை தினத்தன்று,

1. கிரதயுகம் தொடங்கிய நாள்.

2. பாண்டவருக்கு (தருமருக்கு சூரிய பகவான்)அட்சய பாத்திரம் அளித்த நாள்.  மணிமேகலையும் அட்சய பாத்திரம் பெற்றதும் இந்நாளிலே.

3. அம்பிகையின் ரூபமான அன்னபூரணியிடம் பிச்சாண்டவர் கோலத்தில் சிவபெருமான் பிக்ஷை பெற்ற நாள்.

4. ஸ்ரீ ஆதிசங்கரர் லட்சுமிதேவியை போற்றிப் பாடி (கனகதாரா ஸ்லோகம்)  ஏழை பெண் வீட்டில் செல்வம் மழை பொழியச் செய்த நாள்.

5. கிருஷ்ண பரமாத்மாவிற்கு குசேலன் அவல் கொடுத்து  குபேரனாகிய நாள்.

6.பகீரதனின் தவத்தினால் கங்கையை, ஈசன் பூமிக்குக் கொண்டு வந்ததும் இந்நாளிலே.

இவ்வளவு சிறப்புமிக்க நாளில் செய்யும் செயல்கள் நன்கு விருத்தி அடையும்,  நன்மை பயக்கும்.  அன்னம்,  உடை தேவையுள்ளோர்க்கு தானங்கள் செய்வது சிறப்பு. வீட்டிற்கு தேவையான  உப்பு, மஞ்சள், அரிசி, பருப்பு, கற்கண்டு ஆகியவை அக்ஷய திருதியை அன்று வாங்குவதால் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கும். செய்யும் பிரார்த்தனைகள் பலிக்கும்.

ஜோதிட கண்ணோட்டம்:

 சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் தன்னுடைய  உச்ச வீட்டில் சஞ்சரிக்கும். அக்ஷய திருதியை அன்று  சந்திரன் தன்னுடைய உச்ச வீடான ரிஷபத்தில் இருக்கும், இதை சூரிய- சந்திர சேர்க்கையாக எடுத்துக் கொள்ளவேண்டும் (பிருகு நந்தி நாடி விதிப்படி). இதை சிவசக்தி  யோகமாக கருதப்படுகிறது. சூரியனும்- சந்திரனும் மிகவும்  பலம் பெற்ற  அக்ஷய திருதியை  நாளில்,  சிவபெருமான் மற்றும் அன்னை  பார்வதி தேவியை வணங்கினால்  ஆத்ம பலமும்- மனோபலமும் ஒருங்கே நமக்கு கிடைக்கும்.  ஆத்ம சக்தியுடன் மனோ சக்தியும் பெருபவருக்கு எத்தீமையும் அனுகாது.‌  இந்நாளில்  குலதெய்வத்தை வணங்குவதால், தெய்வம்  குடும்பத்தை அரண் போல்  காக்கும். அன்னை மகாலட்சுமிக்கு  இனிப்பு பதார்த்தம் செய்து  வழிபடுவதால் , வளம் பெருகும்.

நன்றி

 பத்மப்ரியா பிரசாத்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.