பெண் ஞானி ஸ்ரீ அம்மாளு அம்மாள்!!!

 


பெண் ஞானி ஸ்ரீ அம்மாளு அம்மாள்!!!

உன்னதமான நம் பாரத மண்ணில்   தெய்வ அவதாரங்கள்,மகான்கள் சித்தர்கள், ஞானிகள் தோன்றி மேலும் நம் மண்ணை புனிதப்படுத்தி உள்ளனர். அவ்வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது அம்மாளு அம்மா  எனும் பெண் ஞானி - மிகப்பெரிய விஷ்ணுபக்தை .  குழந்தை முகத்துடன், குணத்துடன் கருணைமிகுந்த அம்மாளு அம்மாள் கவிப்பாடுவதில் வல்லவர். ஸ்ரீ புரந்தரதாசரின் அம்சமாக அம்மாளு அம்மா இருந்ததாக  ஸ்ரீ மஹா பெரியவாள் தன்னுடைய திருவாய் மொழித்திருக்கிறார்.

கும்பகோணத்தில் கங்கராச்சாரியார் - வேணு() அம்மாள் தம்பதிக்கு

29--5-1908 அன்று அம்மாளு அம்மாள் மகளாகப் பிறந்தார். நரசிம்மர், பாண்டுரங்கன்,  ஸ்ரீராகவேந்திரரை மிகுந்த பக்தி கொண்டு வணங்கி வந்தார். மிகச் சிறுவயதிலேயே குப்பண்ணா என்பவருக்கு மணமுடித்து வைத்தனர்.

வாழ்க்கைப் புரியும் முன்னரே கைம்பெண் ஆனார். அக்காலத்தில் இளம் பெண் கணவனை இழந்து வாழ்வது என்பது மிக மிகக் கொடுமையான விஷயம் . இந்த சமுதாயம் கொடுத்த இன்னல்கள் சொல்லில் அடங்காது. கள்ளம் கபடமற்ற தூய(குழந்தை) உள்ளத்துடன்,  உள்ளார்ந்த பக்தி பாவத்துடன்  அனுகும் எவரையும் காப்பது பரப்பிரம்மத்தின் இயல்பு. அம்மாளு தன்னுடைய துயர் தீர அருகிலிருக்கும் குளத்திற்குள் விழுந்து தன்னை மாய்த்துக்கொள்ள எண்ணி குதிக்க சென்றார்.    அப்பொழுது ' நில்' என்று ஒரு குரல் தடுத்தது. கூறியது வேறு யாருமல்ல அம்மாளு அம்மாள் வணங்கும் ஸ்ரீ நரசிம்மர் பிரத்யட்சமாக சாந்த சொரூபியாக காட்சி கொடுத்தார். அம்மாளு அம்மா வேண்டிய  ' பசியில்லா' வரத்தை கொடுத்து அருளினார் . அதுநாள் முதல்  அம்மாளு அம்மாள் ஒரு டம்ளர் மோர்/ பால் அல்லது ஒரு பழம்  என  ஒருநாள் உணவாக   உட்கொள்ள ஆரம்பித்தார்.  ஏகாதசியன்று அதுவும் சாப்பிட மாட்டார் . ஏறத்தாழ 90 வருடங்கள்  அன்னம் இன்றி வாழ்ந்திருக்கிறார்.

ஒருநாள் பாண்டுரங்கர் அம்மாளுவின்  கனவில் தோன்றி பண்டரிபுரம் வரச்சொன்னார். மறுநாள் தன்னுடைய தாயை  தன்னுடன் பண்டரிபுரம் வர கூப்பிட்டார் . அம்மாளுவின் அம்மா வர இயலவில்லை. எனவே தனியாக தம்பூராவோடு பண்டரிபுரம் சென்று பல வருடங்கள் அங்கேயே தங்கிவிட்டார். கோவிலில் கைங்கரியங்கள் செய்து மடப்பள்ளியில்  உணவு வகைகளை சமைத்து பாண்டுரங்கனுக்கு அன்போடு சமர்ப்பித்து மக்களுக்கு விநியோகித்தார்.  தான் எப்பொழுதும் போல பால் அல்லது மோர் அருந்துவார். அவ்வூர் ராணி அம்மாளு அம்மாவின் பக்தியையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து  வெள்ளி, தங்கம் பாத்திரங்களை பரிசளித்தார். பரமனை அறிந்த அம்மாளுக்கு தங்கமும் , மண்ணும் ஒன்றே. எனவே தனக்கு கிடைத்த அனைத்தையும் அங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து விட்டார். தனக்குக் கொடுக்கப்படும் எந்தப் பரிசுப் பொருளையும் பணத்தையும் தனக்காக வைத்துக்கொள்வது கிடையாது.

பல கீர்த்தனங்கள் சரளமாக பாடும் வல்லமை பெற்ற அம்மாளு அம்மாள், நன்கு நடனமாடவும் செய்வார்.

ஒருசமயம் சென்னை ஜார்ஜ் டவுனில் நாராயண செட்டி சத்திரத்தில் அவர் தங்கியிருந்த சமயத்தில்  சென்னையில் பொருட்காட்சி நடந்தது. அங்கே நாட்டியக் கலைஞர்களும் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட நாட்டிய கலைஞர்கள் அம்மாளு அம்மாள் தங்கியிருந்த சத்திரத்தின் மேல்தளத்தில் தங்கியிருந்தனர். நள்ளிரவு தாண்டியதும் கீழே நர்த்தனமாடும் சத்தம் கேட்டு வந்து பார்த்த அத்தனைப் பேரும் மெய்மறந்தனர்‌. அவ்வளவு அற்புதமாக அம்மாளு அம்மாள் கீர்த்தனை பாடி  நடனமாடினார்.  நன்கு கற்ற தேர்ந்த நாட்டிய கலைஞர்கள்   ஆட முடியாத பல ஜதிகள் அம்மாளு அம்மாள் மிக எளிதாக ஆடினார். அப்போது அனைவரும் அம்மாவை இறை அம்சமாகவே பார்க்க தொடங்கினர்.

 ஒருசமயம்  கும்பகோணத்தில் முகாமிட்டிருந்த மகா பெரியவா தரிசிக்க ஒரு குடும்பம் வந்தது. அவர்களை அனுகிரகம் செய்ய தாழ்மையுடன் வேண்ட, ஸ்ரீ மகா பெரியவரோ " மரத்தடியில் இருக்கும் நித்திய உபவாசி"யிடம்   சென்று ஆசிர்வாதம் பெற  கூறினார். அது முதல் , அம்மாளு அம்மாவை பார்க்க பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வர தொடங்கினர் .  40 ஆயிரம் பாடல்களை எழுதிய அம்மாள் தன்னுடைய 102 ஆவது வயதில்  2010 பங்குனி உத்திரம் அன்று சித்தி அடைந்தார்கள் . இதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே  தான் எழுதிய 'வைகுண்டம்' பற்றிய பாடல்களில் வைகுண்டத்தின்  சிறப்பை, அமைப்பை   உணர்த்தி இருக்கிறார்.

ஞானம் அடைவதற்கு/பெறுவதற்கு ஜாதகத்தில் ஞானகாரகன்/மோட்சகாரகன் எனப்படும் கேதுவிற்கு திரிகோணத்தில் (1,5,9,12) சந்திரன்/குரு/ சனி ஆகிய கிரகங்கள்   இருக்க வேண்டும் . இவ்வமைப்பு கொண்டவர்கள்  எளிமையாக சித்தர் தரிசனம் பெறலாம் . ஞானம் பெறுவதற்கும், பிறப்பு-இறப்பு சூழலில் இருந்து விடுபடுவதற்கும் சித்தர் அல்லது சித்தர்களின் ஜீவ சமாதியை வழிபாட்டால்  மிகவும் நல்லது.

நன்றி

பத்மப்ரியா பிரசாத்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.