புதனின் காரகங்கள்..!

 


புதனின் காரகங்கள்..!

சோதிடத்தில் அதிருப்தியை குறிப்பவர் புதன், அதிருப்தி எழும் போது தான் ஒருவரால் முன்னோக்கி அந்த குறிபிட்ட காரகங்களில் தேடலை தொடங்க இயலும், ஒரு செயலை ஒருவர் செயல்படுத்தும் போது அதில் நேர்த்தியை தீர்மானிப்பது புதனே, புதனே கற்றுகொள்ள தூண்டுகிறார், கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தரும் புதனே கற்றலில் வெறுமையை தருகிறார், புதன் வலுபெற்று கற்றால் அதில் மேம் மேலும் ஆர்வம் எழும், புதன் வலுகுறைந்து கற்றால் அதில் திருப்தியின்மை ஏற்படும், பின்னர் அதில் தேடல் அதிகரிக்கும் பின்னர் அதில் வெறுமையை உணரும் நிலைக்கு தள்ளபடுவார்கள், ஒருவரின் குழப்ப நிலைக்கு காரணம் புதன், நல்லாதானே செய்தோம் பின்னர் எங்கிருந்து இந்த குழப்பம் வந்தது என்று அவருக்கே தெரியாமல் குழப்பதை ஏற்படுத்திவிடுவார், புதன் கெட்டால் பேச்சில் ஸ்திர தன்மை இருக்காது, புதன் உதவி இருந்தால் தான் நீங்கள் நினைப்பதை மற்றவருக்கு தெரிவிக்கவே இயலும், புதன் நாம் எழுதும் எழுத்துக்களை ஆள்கிறார், ஒருவருக்கு சுபத்துவ புதன் என்றால் அவரின் எழுத்துக்களில் நேர்மறை அதிகம் தென்படும், ஒருவரை பார்த்து அவரின் செயலை எடைபோடும் அறிவை புதனே தருகிறார், புதன் தொடர்பு கொள்ளுதலை குறிகிறார், ஒருவர் சீராக சரியான தொடர்பு கொள்ளுவதை தன் பழக்கமாக கொண்டால் அவருக்கு புதன் வலுபெற்று உள்ளார் என்றே பொருள், சொன்னதை சொன்ன நேரத்துக்கு செய்யாமல் தாமதம் அல்லது மறந்தே போவது புதன் வலு குறைந்தவரின் செயல்பாடு..!

புதன் மறைவிடங்களில் வலுவிழந்து நின்றால் அதிக எதிர்மறை எண்ணங்களை தருவார், பொதுவாக இவர்களுக்கு மற்றவர் வாழ்க்கையை அறியும் ஆர்வம் அதிகமிருக்கும், ஓட்டுகேட்பது நீச்ச புதனின் குணமாகும், மற்றவரின் நிம்மதியை பேச்சால் கெடுப்பது வலுவிழந்த புதனின் செயல், மற்றவர் கஷ்டத்தை பார்த்து சந்தோஷபடுபவர் வலுவிழந்த புதன்+கேது இணைவு பெற்றவர், புதன் எதையும் வெளிபடையாக செய்யாது அவரின் செயலில் பூடகம் இருக்கும், புதன் வலுபெற்ற ஜாதகர்கள் பூடகமாகவே செயல்படுவார்கள், புதன் தான் நகைச்சுவை காரகர் நகைச்சுவை கருத்துக்கள் சித்தாந்தமாக இருந்தால் புதனுடன் கேது, நகைச்சுவை வேதாந்தமாக இருந்தால் புதனுடன் குரு, நகைச்சுவை ஆழமான வாழ்வியல் உண்மையை கூறினால் புதனுடன் சனி, நகைச்சுவையில் மற்றவரை குத்திகாட்டினால் புதன்+சூரியன், நகைச்சுவை வெறும் நகைப்புக்கு உரியதாக மட்டுமே இருந்தால் புதன்+சந்திரன் ஏனெனில் அதில் லாஜீக் இருக்காது, நகைச்சுவையில் வக்ர கருத்துக்கள்/மற்றவரை புண்படுத்தும் கருத்துக்கள் இருந்தால் புதன்+ராகு, நகைச்சுவையில் ஈர்க்கும் கருத்துக்களும், பெண்களை பற்றிய கருத்துக்களும் இருந்தால் புதன்+சுக்கிரன், நகைச்சுவையில் ஆவேசம்/ஒருவரை வசைபாடுவதாக இருந்தால் புதன்+செவ்வாய், இப்படி நகைச்சுவையில் கூட புதன் தன் இரட்டை நிலையை காண்பிக்கும்..!

புதன் எந்த கிரகத்துடன் சேர்க்கை/தொடர்பு பெறுகிறதோ அதன் வலுவை பொறுத்து அந்த கிரகத்தின் காரகங்களே ஜாதகரின் பேச்சு அல்லது செயலில் தென்படும், புதன்+குரு என்றால் மற்றவருக்கு போதனை செய்வார் அல்லது அவ்வாறான சூழல் இயல்பாக அமையும், புதன்+கேது எல்லாவற்றையும் ஆழமாக ஆராய்வார், பேச்சில் கூட ஆழமான உட்கருத்துக்கள் இருக்கும், பொதுவாகவே இவர்கள் யாருடனும் அவ்வளவு எளிதாக பேசமாட்டார்கள் காசுகொடுத்து பேசவைக்க வேண்டும் என்கிற நிலை, புதன்+செவ்வாய் பேசிக்கொண்டே நடப்பார் அல்லது ஏதாவது செய்துகொண்டே பேசுவார், பேச்சில் வேகம் தெறிக்கும், புதன்+சூரியன் வாக்குறுதிகள் அதிகம் கொடுப்பார், எல்லா நான் பார்த்துகிறேன் என்பார், புதன்+சுக்கிரன் பெண்ணை போல பேசுவார் பேச்சில் அதிக பெண் தன்மை வெளிபடும், பேச்சில் இனிமை இருக்கும் அதில் ஆசையும் இருக்கும், புதன்+ராகு பேசிக்கொண்டே இருப்பார் அவசியம் அவசியம் இல்லை என்பது இரண்டாம் பட்சம், பேச்சில் ஒரு ஈர்ப்பு தென்படும் எதையும் பெரிதுபடுத்தி பேசுவார், நான் கோயிலுக்கு சென்றேன் என்பதை புதன்+ராகு எப்படி கூறுவார் தெரியுமா? நேற்று நான் திடீர்னு ஒரு கோயிலுக்கு போலாம் என்று முடிவு செய்தேன், பின்னர் அதனை மேப்பில் தேடினேன் இங்கிருந்து தூரமாக தான் இருந்தது, ஆனாலும் அந்த கோயில் 1000 வருடம் பழமையானது ரொம்ப தெய்வ சக்தி உள்ள கோயில் என்று நண்பர்கள் கூறினார்கள், சரி நாம தான் பார்க்கவே இல்லையே என்று 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு போனேன், போற வழியில ஒரே இருட்டு அப்பதான் தொனினது கொஞ்சம் முன்னாடியே கிளம்பிருக்கணும் என்று ஆனால் இப்போது என்ன செய்வது எப்படியோ சமாளித்து கோயிலுக்கு போனா அங்கே வண்டி நிறுத்த சரியா இடம் கிடைக்கல, பின்னர் எப்படியோ ஒருவழியே வண்டிய நிறுத்தி கோயிலுக்கு உள்ள போனேன் என்பார், புதன்+சந்திரன் இவர்கள் பேச்சை புரிந்து கொள்வது கடினம் பேசுகிறேன் என்று சில சமயங்களில் உளறிவிடுவார்கள் இதில் சிலர் உண்மையை உளறுவதும் உண்டு இதையே ஓட்டை வாய் என்பார்கள், மேலும் இவர்களுக்கு உணர்ச்சிவசபட்டு பேசும் குணம் உண்டு அதனால் தான் பேசுவது என்ன என்பதை பல நேரத்தில் தவறவிட்டுவிடுவார்கள், புதன்+சனி இவர்கள் எதையும் நிறுத்தி நிதானமாக பேசுவார்கள் பேச்சில் ஒரு ஆழம் இருக்கும், பெரும்பாலும் இவர்கள் பேசுவது சோகமான சம்பவங்களை பற்றியே..!

புதனே சந்தைப்படுத்தல் அல்லது ஒரு பொருளை விற்பனை செய்தல் போன்ற காரகங்களை குறிக்கும், ஒருவர் தன் பேச்சு திறமையால் தான் தொழில்/வேலையில் நிலைகிறார் என்றால் பொருத்தமாகவே இருக்கும், வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்று கூறுவதன் பொருள் பேச்சின் அவசியத்தை உணர்த்தும், பேச்சால் நாட்டை இழந்தவரும் உண்டு பேச்சுவார்த்தையால் நாட்டை ஆண்டவரும் உண்டு, பேச்சு தான் ஒருவரின் வாழ்க்கையை வழிநடத்தி செல்கிறது, இதே புதன் தான் காதலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார் சரியான புரிதல் அல்லது தொடர்பு கொள்ளுதல் இல்லாமல் பிரிந்த காதல் இங்கே அதிகம், மேலும் இதே காதலில் மனிதன் இருக்கும் போது புதன்+ராகு+சுக்கிரன் கூட்டணி உருவாகி ஜாதகரை ஒரு மாய உலகில் சுழல வைக்கிறது, காதல் முடிந்து கல்யாணம் என்கிற நிலை அடைந்தவுடன் ஆண் என்றால் புதன்+செவ்வாய் பெண் என்றால் புதன்+குரு என்கிற நிலையை அடைகிறது இதுவே புதனின் இரட்டை நிலைக்கு சான்று, நட்புக்கு புதனே அதி முக்கிய காரகம் வகிக்கிறார், ஒருவரின் ஜாதகத்தில் புதன் நின்ற நிலை பொருத்தே நட்பின் வலிமையை கணிக்க இயலும், புதன்+சனி கூட்டமான தகுதிக்கு குறைவான நட்பு வட்டம், புதன்+சூரியன் அதிகாரமான/ஆளுமையான நட்பு வட்டம், புதன்+சந்திரன் அன்பான/விளையாட்டுதனமான நட்பு வட்டம், புதன்+சுக்கிரன் சுகத்துக்கான/ஆடம்பரமான நட்பு வட்டம், புதன்+செவ்வாய் துடிப்பான/செயல்பாடுகள் உள்ள நட்பு வட்டம், புதன்+கேது லாபநோக்கம் இல்லாமல் மற்றவருக்கு உதவும் நட்பு வட்டம், புதன்+ராகு லாப/நஷ்ட கணக்கு போட்டு சேரும் நட்பு வட்டம், புதன்+குரு கற்று தெரிந்து பகிர்ந்து மேன்மை பெற எண்ணும் நட்பு வட்டம், இப்படி புதன் தொடர்பு கொள்ளுவதில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் இல்லாமல் மனித வாழ்க்கையை சுவாரசியமாக கடத்தி செல்லவும் காரணமாகிறார் என்றால் மிகையாகாது, மீண்டும் சந்திப்போம்..!

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.