புதனின் சிறப்புகள்..!

 


புதனின் சிறப்புகள்..!

நவகிரகங்கள் இருந்தாலும் அதில் புதன் தனித்துவம் பெற்றவர், புதன் ஒருவரே தன் சுய வீட்டில் உச்சம்/மூலதிரிகோணம்/ஆட்சி ஆகிய மூன்று வலுவையும் ஒன்றாக பெறுகிறார், இதன் பொருள் என்னவென்றால் புதன் தனித்து இயங்கக்கூடியவர் என்பதே, எந்த கிரகம் என்றாலும் சார்பு நிலை இருக்கவே செய்யும் ஆனால் புதனுக்கு சார்பு நிலையுடன் தனித்து இயங்கும் வல்லமையும் உண்டு என்பதை தான் தன் சுய வீட்டில் முழு வலுவை பெறுவது காட்டுகிறது, ஒருவர் ஜாதகத்தில் புதன் வலுத்துவிட்டால் மற்ற அத்தனை கிரக தாக்கங்களையும் எதிர்கொள்ளும் சாதுர்யத்தை பெற்றுவிடுவார், புதன் இரட்டை தன்மை வகிப்பதற்கு காரணமும் உண்டு, அது என்னவென்றால் புதனில்லாமல் எந்த கிரகங்களும் செயல்பட இயலாது ஏனெனில் செயல் என்பதே சிந்தனையில் உதிப்பது தானே, பொதுவாக புதன் தன் வலுவை நேர்நிலையில் பெறுவது அவ்வளவு நன்மை அல்ல என்றே பல சோதிட முன்னோர்களின் கருத்து அது ஏன்?, ஏனெனில் புதன் நேர்வலுவில் நின்றால் அந்த ஜாதகருக்கு அதீத சிந்தனைகளை தருவார் இதனால் ஜாதகர் எதிலும் நிலையில்லாமல் இருப்பார், மேலும் புதனின் துணையால் கர்வம் ஏற்படும் இதனால் மற்றவரை பகைத்து கொள்வார், இதனால் தான் நேர்வலு பெறுவதை விட மறைவில் வலுபெறுவது மிக நல்ல பலன்களான மறை ஞான தேடலில் நிதானம்/விட்டுகொடுத்து போவது போன்ற குணங்களை புதன் அருள்வார், புதனுக்கு எப்போதும் மற்றவரின் அறிவுரை பிடிக்காது அதனால் தான் குருவின் வீட்டில் நீச்சமடைகிறார், அந்த நீச்சமும் முழுமையானது அல்ல, ஏனெனில் முழுதாக நீச்சம் பெற்றால் குருவின் உபதேசம் காதில் எப்படி விழும், புதனுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு, ஒருவருக்கு சிறு துளி அறிவு கூட இல்லாமல் எந்த மனிதரையும் படைப்பதில்லை பரம்பொருள், அந்த சிறு அறிவிலும் பெரிய ஆற்றலை புதனால் தான் வெளிபடுத்த இயலும் ஏனெனில் அவர் நீச்சம் எனும் அறிவிழந்த நிலையை கூட தன் சுய சாரத்தில் தான் அடைகிறார்..!

புதன் சிறப்பாக அமைந்தவர்கள் வாழ்வில் அனைத்து கர்மங்களையும் எதிர்கொள்வார், ஏனெனில் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் எதுவும் நிலையில்லை என்பது, புதனை மயக்க சுக்கிரன் ஒருவரால் தான் இயலும் ஏனெனில் புதன் நீச்சமடையும் வீட்டில் சுக்கிரன் உச்சம், ஆனால் இதிலும் புதன் தான் வென்றார் என்பேன், ஏனெனில் ஒரு மாணவனை (புதன்) அடக்க இரு குருமார்கள் (குரு+சுக்கிரன்) கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு கொண்டு சென்றார் அல்லவா அதுவே புதனின் வெற்றி, புதன் வலுத்த பலர் சுக்கிரனிடம் ( பெண்/ஆசை/பொருள்/சுகம்/வசதி/வாய்ப்பு) அடிமையானதை என் அனுபவத்தில் அதிகம் கண்டுள்ளேன், அதனை தனக்கு சாதகமாக்க தெரிந்தவர் மறைவில் சுபத்துவம்/வலு பெற்ற புதன் தான், மற்றவர்கள் எதிர் எதிரில் நின்று மூக்கை உடைத்துக்கொள்வார்கள், அதே போல் மறைவில் புதன் வலுத்தவர்கள்/சுபத்துவம் பெற்றவர்களுக்கு கடவுள் நம்பிக்கை/குரு பக்தி இருக்கும், அதுவே நேர் வலு பெற்றவர் நாத்திகம் பேசுவார் அல்லது நிந்தனை செய்வார், புதன் தானே அனைத்தையும் சேமிக்கிறான் அதாவது தகவல்கள்/சிந்தனைகள் இவைகளை புதனே சேமிக்கிறான், அவன் மறைவில் ஒரு கணினியில் இருக்கும் வரை தகவல்களை எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல, ஏனெனில் அங்கே முழு பாதுகாப்பில் (பாஸ்வேர்ட்) இருப்பார், ஆனால் அதே புதன் புத்தகத்தில் எழுத்தில் இருக்கும் போது பாதுகாப்பு குறைவே, இதுவே மறைவில் நின்ற புதனுக்கும்/நேர் வலு பெற்ற புதனுக்கு உள்ள வித்தியாசம், பொதுவாகவே புதன் நேர்வலு பெற்றவர்கள் தாங்கள் கற்றதை மற்றவருக்கு கற்றுக்கொடுப்பார்கள் ஆனால் அதில் இன்னொருவரின் வீழ்ச்சி இருக்கும், அதாவது ஒரு ஆசிரியர் அதிகம் பிரபலம் அடைந்து விட்டார் என்றால் இன்னொரு ஆசிரியர் பொறாமையில் அந்த ஆசிரியரை விட குறைவான கட்டணத்தில் சொல்லிக்கொடுப்பார், இது போட்டியால் ஏற்படும் பொறாமை, ஆனால் மறைவில் வலுத்த புதன் கற்று கொள்பவன் தகுதியானவனா என்பதை மட்டுமே பார்த்து கற்றுக்கொடுக்கும், புதன் தான் சோதிடத்துக்கு பிரதானம் ஆனால் இந்த புதன் குரு பார்வையில் நின்றால் தான் அந்த சோதிடர் நல்ல ஆசிரியராக கற்றுக்கொடுப்பார், இல்லை என்றால் புதன் தன் சோதிட புலமையில் மேல் இருக்கும் ஆனவத்தால் யார் சொல்லையும் கேட்காமல் தான் இப்படி தான் வந்தால் வாருங்கள் இல்லாவிட்டால் போங்க என்பார், புதனை வளைப்பது அவ்வளவு சுலபமல்ல அவர் எல்லாவற்றிலும் நழுவுவார், மீண்டும் சந்திப்போம்..!

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.