இந்தியர்களுக்கு மரங்களை கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த மனிதர்

 
சுந்தர்லால் பகுகுனா: இந்தியர்களுக்கு மரங்களை கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த மனிதர்

"நாம் பூமிக்கு எதிராக வன்முறை செய்கிறோம்; இயற்கைக்கு எதிராக வன்முறை செய்கிறோம்; நாம் இயற்கைக்கான கசாப்புக் கடைக்காரர்கள் ஆகிவிட்டோம்," என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார் சுந்தர்லால் பகுகுனா.

கடந்த வியாழக்கிழமையன்று தமது 94 ஆம் வயதில் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்த சுந்தர்லால் பகுகுணா இந்தியர்களுக்கு மரங்களை கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த மனிதராக உலகுக்கு அறியப்படுகிறார்.

1970-களில் வட இந்தியாவில் நிகழ்ந்த 'சிப்கோ' இயக்கத்தின் ஒரு முக்கியத் தலைவராக விளங்கியவர் இவர்.

இந்தியில் 'சிப்கோ' என்றால் 'கட்டியணைத்தல்' என்று பொருள்.

பகுகுனா மற்றும் அவரது சக செயல்பாட்டாளர் சந்தி பிரசாத் பட் ஆகியோரின் அறைகூவலை ஏற்று இமயமலைப் பகுதியில் வாழும் ஆண்களும் பெண்களும் அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு எதிராக அவற்றைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைத்து கட்டிக்கொண்டனர்.

"முதலில் எங்களை வெட்டிவிட்டு மரத்தை வெட்டுங்கள்," என்பதே அவர்கள் அதன் மூலம் தெரிவித்த செய்தி.

உலகின் உயரமான மலைத் தொடரில் உள்ள சுற்றுச்சூழல் நெருக்கடியை நோக்கி உலகத்தின் கவனத்தை திருப்பியது இந்த இயக்கம்.

தற்போதைய உத்தராகண்ட் மாநிலத்தில் 1970ஆம் ஆண்டு உண்டான ஒரு பெருவெள்ளம் அங்கிருந்த கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை மணியை அடித்தது.

"காடழிப்பு, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஆகியவற்றுக்கு இடையே இருந்த ஒரு நிச்சயமற்ற தொடர்பை அவர்கள் புரிந்து கொண்டனர்," என்று சிப்கோ இயக்கம் குறித்து எழுதுகிறார் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் கழித்து சுந்தர்லால் பகுகுனா மற்றும் அவரது சக செயல்பாட்டாளர்கள் மரங்களை கட்டியணைக்கத் தொடங்கினார்கள்.

இயற்கையைப் பாதுகாப்போம் என்று இளைஞர்கள் தங்களது ரத்தத்தின் மீது உறுதி எடுத்துக்கொண்டனர். இதன் பின்பு இமயமலைப் பகுதியில் வாழும் பெண்களும் இந்த இயக்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாகினர்.

அப்பெண்கள் மரங்களை கட்டியணைத்ததுடன் அவர்கள் மரங்களுக்கு 'ராக்கி' கட்டிவிட்டனர். இந்துப் பண்டிகையான ரக்ஷா பந்தனின்போது சகோதரர்கள் என்று அடையாள படுத்துவதற்காக ஆண்களின் கைகளில் பெண்கள் கட்டுவது ராக்கி.

அடர்ந்த பனியின் நடுவே நடந்து சென்ற அவர்கள் மரங்களை வெட்டுவோரிடம் இருந்த கருவிகளை தூக்கிக் கொண்டு வந்தனர்.

இமய மலையிலேயே பிறந்து வளர்ந்த பகுகுனா இவற்றுக்கிடையே இருந்து தொடர்பை அறிந்து கொண்டார் காடுகள் அழிக்கப்படுவதால் மண் வளம் குன்றி அங்கே இருக்கும் உள்ளூர்வாசிகள் நகரங்களை நோக்கி வேலைக்காக புலம்பெயரத் தொடங்கினர் என்று எழுதினார் .

இதன் காரணமாக கால்நடைத் தீவனம், விறகு, தண்ணீர் ஆகியவற்றை சேகரிக்கும் பொறுப்புடன் சேர்த்து விவசாயமும் செய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு உண்டானது.

பெண்கள் உரிமையை பெறுவதில் சிப்கோ இயக்கம் ஒரு முக்கிய மைல் கல்லாக உள்ளது என்பது ஒன்றும் வியப்பான செய்தி கிடையாது.

ஆண்டுகள் ஆக ஆக கல்லூரி மாணவர்களும் பெண்களும் பெரும் எண்ணிக்கையில் சிப்கோ இயக்கத்தில் பங்கெடுத்தனர். அமைதியான போராட்டங்கள் நடத்தினர்.

அவர்கள் மரங்களை கட்டியணைத்துக் கொண்டதுடன் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இறுதியாக இது பலனளித்தது. 1981இல் நடந்த ஓர் உண்ணாநிலை போராட்டத்திற்கு பிறகு வர்த்தக நோக்கத்துடன் உத்தராகண்ட் பகுதியில் மரங்களை வெட்டுவது 15 ஆண்டுகாலம் தடை செய்யப்பட்டது.

சுற்றுச்சூழல் சிதைவு குறித்து பரப்புரை செய்ய, 1983ஆம் ஆண்டு இமயமலையில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் சென்றார் சுந்தர்லால் பகுகுனா.

இந்தியாவிலேயே உயரமான இடத்தில் அமைந்துள்ள தெஹ்ரி அணை கட்டுவதற்கு எதிராக 1992ஆம் ஆண்டு மொட்டை அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தினார் சுந்தர்லால் பகுகுனா. அந்த அணையை கட்டுவதால் தங்களது பூர்விக வீடுகளை இழந்தவர்களில் அவரும் ஒருவர்.

தனியார் ஒப்பந்ததாரர்களுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் காடுகளை அழிப்பதில் இருக்கும் தொடர்பு குறித்து சுந்தர்லால் பகுகுனா தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்.

சுந்தர்லால் பகுகுனாவின் இயக்கம் குறித்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் கேட்டபோது "உண்மையாகச் சொல்லப்போனால் அந்த இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் மரங்கள் வெட்டப்படக்கூடாது என்றால் நான் அதற்கு நிச்சயமாக முழு ஆதரவு தருவேன்," என்று குறிப்பிட்டார்.

காலங்கள் மாறினாலும் சுந்தர்லால் பகுகுனா நடத்திய இயக்கத்தின் குறியீடுகள் தொடர்கின்றன . மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக 3000 மரங்கள் வெட்டுவதை எதிர்த்து 2017ஆம் ஆண்டு சமூக செயல்பாட்டாளர்கள் மும்பையில் மரங்களை கட்டி அணைத்து போராட்டம் நடத்தினர்.

காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றி எளிய வாழ்க்கை வாழ்ந்த பகுகுனா, ஓர் ஈர்ப்பு மிக்க துறவி போல இருந்தார். ஆசிரமம் ஒன்றில் வாழ்ந்த அவர் வன்முறையை தவிர்த்தார். அரசியல் சார்பற்றவராகவே இருந்தார்.

பெருமளவிலான வெளிநாட்டு வர்த்தகத்தைவிட தற்சார்பு பொருளாதாரத்தில் நம்பிக்கை உடையவராகத் திகழ்ந்தார். பணம் மற்றும் பொருள் போன்றவற்றை மறுதலித்தார்.

வன்முறையற்ற வகையிலும் நிரந்தரமாகவும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்தியா மனிதக் கழிவில் இருந்து பயோ கேஸ் உற்பத்தி செய்ய வேண்டுமென்றும், சூரிய ஒளி காற்றாலைகள் மற்றும் நீர் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

1977ஆம் ஆண்டு தற்போதைய உத்தராகண்டில் தெஹ்ரி மாவட்டத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்தவர் சுந்தர்லால் பகுகுனா.

முன்னாள் பிபிசி ஊழியரான அமித் பரூவா 1970இல், தமது பதின்வயது காலத்தின்போது பகுகுனா இமயமலையில் மேற்கொண்ட பணிகளைக் காண்பதற்காக தமது பள்ளி ஏற்பாடு செய்திருந்த பயணம் ஒன்றை நினைவு கூர்கிறார்.

அங்கு சென்றபோது போராட்டம் மற்றும் சர்ச்சைகளைக் கோரும் நபரை அவர் சந்திக்கவில்லை என்கிறார். ஆனால் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும், கண்ணியமான, மென்மையாகப் பேசும் நபரை சந்தித்தார்.

மரங்கள் வெட்டப்படுவது மற்றும் இமயமலையிலுள்ள ஊற்றுகள் வறண்டு போவதற்கும் இடையே தொடக்க காலத்திலேயே இருந்த தொடர்பு குறித்து சுந்தர்லால் பகுகுனா பேசியிருந்தார்.

தனது பயணத்தின் போது இமய மலையில் வசிக்கும் மக்கள் அங்கிருந்த மழை நீர் ஊற்றுக்கள் வறண்டு போனதால் தொலைதூரம் சென்று தண்ணீர் பிடித்து வர வருவதை பரூவா பார்த்தார்.

சுந்தர்லால் பகுகுனாவின் செயல்பாடுகள் தமது சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து வந்ததை தாம் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார் பரூவா.

தமது வாழ்நாள் முழுவதும் பூமியைக் காக்கப் போராடிய, இந்த மண்ணுக்கான மனிதராக சுந்தர்லால் பகுகுனா நினைவுகூரப்படுவார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.