மிரட்டும் ரான்சம் வைரஸ்:

 


மிரட்டும் ரான்சம் வைரஸ்: புது ஸ்டைலில் பணம் பறிக்கும் கும்பல்- போலீஸ் எச்சரிக்கை!

புதிய வகை ரான்சம் வைரஸ் மூலமாக கணினியில் உள்ள தரவுகளை முடக்கி, அதனை மீட்கப் பணம் கோருவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக சைபர்கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக சைபர்கிரைம் காவல்துறையினர் லோரன்ஸ் ரான்சம்வேர் எனும் புதிய வைரஸ் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்த வைரஸ், கோப்புகளை (files) முடக்கி, அதனை மீட்டெடுக்க பணம் கோரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பெரு நிறுவனங்கள் வணிகக் கோப்புகளை முடக்குவதால் வேறு வழியின்றி பணம் செலுத்தி, கோப்புகளை மீட்டெடுக்க நேருகிறது. இந்த வைரஸ் எந்தவொரு கணினியையும் பாதிக்கும் என்பதால் தேவையற்ற வலைதளங்களை பார்வையிடுவது, லிங்குகளை கிளிக் செய்வது, வலைதளப் பயன்பாட்டில் இருக்கும்போது தேவையற்ற விளம்பரங்களை பார்வையிடுதல் போன்றவற்றை செய்வதால் இந்த வைரஸ் கணினியை தாக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் பெருநிறுவனங்களிடம் இதுபோல் லட்சக் கணக்கில் டாலர்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிஷ்ஷிங் இமெயில்கள் மற்றும் ஸ்பாம் மெயிகள் உள்ளிட்டவை மூலமாக கணினிகளுக்கு பரப்பப்பட்டு, வலைபின்னல் முறையில் இணைக்கப்பட்டுள்ள மற்ற கணினிகளுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளின் எல்லா தரவுகளும் முடக்கப்பட்டு அதனை மீட்டெடுக்க பிரத்யேக கட்டணத் தளத்தை அமைத்து, பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

எனவே தேவையற்ற இணைப்புகளில் நுழையவோ, கிளிக் செய்யவோ வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நெட்வொர்க்குகளில் இருந்து அறியப்படாத கணக்குகளை நீக்குதல், தனிப்பட்ட வணிகத் தரவின் காப்புகளை பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது, குறிப்பிட்ட நபர்கள் அல்லது தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கு எதிரானது அல்ல என்றும் சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.