முனிவருக்கும் ஒரு மந்திரவாதிக்கும் இடையே மனக் கசப்பு

 அந்தக் காலத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு முனிவர், ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவரிடம், பல மாணவர்கள் பல நாடுகளில் இருந்தும் வந்து கல்வி கற்றனர். முனிவருக்கும் ஒரு மந்திரவாதிக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இதனால், மந்திரவாதி முனிவரைத் தன் மாந்திரீக சக்தியால் கொன்று விடுவதாக, மிரட்டினான். முனிவர் அதைச் சட்டை செய்யவில்லை.

ஒருநாள் மந்திரவாதி, குட்டிச் சாத்தான்களை ஏவி, முனிவரின் ஆசிரமத்தில் கல்லெறிய வைத்தான். தியானத்தில் இருந்த முனிவர், ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தார்.

""கல்லெறியும் கயவர்களே... நீங்கள் யார்?''

""எங்களைப் பார்த்து யாரென்றா கேட்கிறாய்? ஊசிமூக்கு மூடா... உன்னை கொல்ல வந்த எதிரிகள்!''

""நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். உங்களை ஏவி விட்டவனையும் நன்கறிவேன். மரியாதையாகச் சென்று விடுங்கள்!''

""உம்மைத் தூக்கிக் கொண்டு வரவேண்டுமென்பது எங்கள் தலைவன் கட்டளை!''

""அழிந்து போவீர்கள்!''

""எங்களை அழிக்க உம்மாலும் முடியாது. உன் பாட்டனாலும் முடியாது. நாங்கள் சாகாவரம் பெற்றவர்கள்,'' என்றன குட்டிச் சாத்தான்கள்.

""குட்டிச் சாத்தான்களே... எட்டியே நில்லுங்கள் என்னிடம் வராதீர்கள்!''

""என்ன செய்து விடுவீர்?'' என்று அவை அவரை நெருங்கின.
அந்தோ பரிதாபம்!

அந்த ஆறு குட்டிச் சாத்தான்களையும் வவ்வால்களாக மாற்றி, மரத்தில் தொங்க விட்டு விட்டார் முனிவர். இதை எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்த ஏழாவது குட்டிச் சாத்தான், குடுகுடுவென்று ஓடி மந்திரவாதியிடம் சொன்னது.

மூன்றாம் நாள், முனிவர் ஆசிரமத்தில் இல்லாத போது, மந்திரவாதி சென்று மரங்களில் தொங்கிக் கொண்டிருந்த வவ்வால்களை மீண்டும் குட்டிச் சாத்தான்களாக மாற்றிக் கொண்டு வந்து விட்டார். அதிலிருந்து மந்திரவாதிக்கும், முனிவருக்கும் பகை தொடர்ந்தது.

மந்திரவாதி முனிவரைப் பழிவாங்க நினைத்தான். முனிவர் கூடுவிட்டுக் கூடு பாயும் கலையைக் கற்றவர்.

மந்திராவதிக்கும், அந்தக் கலை தெரியும் என்று முனிவருக்குத் தெரியாது.
வழக்கமாக, முனிவர் காவிரியாற்றில் காலையில் நீராடுவார். பவுர்ணமி நாள்களில், இரவு நேரங்களில் காவிரியின் ஒரு துறையில் பச்சை நிறத் தவளையாக மாறி நீரில் நீந்தி மகிழ்வார். இந்த விஷயத்தைக் குட்டிச் சாத்தான் ஒன்று உளவறிந்து மந்திரவாதியிடம் சொல்லிவிட்டது.
பவுர்ணமி அன்று பச்சைத் தவளையாக மாறி நீரில் குதித்த முனிவரை, மந்திரவாதி பாம்பாக மாறித் துரத்தினான். முனிவருக்கு இது தெரிந்தது. வேகமாகத் நீந்த ஆரம்பித்தார். பாம்பு விடவில்லை. பாம்பு பின்னாலேயே துரத்திச் சென்றது.

""ஏய் சாமியாரே.... நில் உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்!''

""வேண்டாம்... என்னை விட்டு விடு!''

""முடியாது. முடியவே முடியாது. குட்டிச் சாத்தான்களை ஏன் வவ்வால்களாக்கிக் கட்டி வைத்தாய்?''

""என்னைக் கொல்ல வந்தன. அதனால்தான் அப்படி செய்தேன்,'' என்றார் முனிவர்.

""இப்போது ஒழிந்து போ!''

பாம்பு துரத்தியது. தவளை திக்குமுக் காடியது. சர்ரென்று நீந்தி வந்த பாம்பின் வேகத்திற்குத் தவளையால் ஈடுகொடுக்க முடிய வில்லை.
இதோ பாம்பின் வாய்க்குள் போகப் போகிறது தவளை!
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாய் பாம்பின் எதிரே வந்த முதலை ஒன்று, தன் வாலால் பாம்பை அடித்தது. அடியில் மிரண்டு போன பாம்பால், தவளையைப் பின் தொடர முடியவில்லை. தவளை கரையில் தாவியது. பின் முனிவராகிய தவளை ஒரு புறாவாக மாறி, வானத்தில் பறந்தது. இதைப் பார்த்த மந்திரவாதி தான் ஒரு வல்லூறாக மாறி புறாவைத் துரத்தினான்.
புறா பறந்தது. பறந்தது பறந்து கொண்டே இருந்தது. வல்லூறு துரத்திக் கொண்டே வந்தது. எதிரே இரை தேடிக் கொண்டிருந்த புறாக் கூட்டத்துடன் முனிவராகிய புறா கலந்து விட்டது.

""டேய் முனிவரே... தனியே வா. எப்படியும் உன்னைக் கண்டுபிடித்துக் கொல்வேன்!''

""உன்னால் என்னைக் கொல்ல முடியாது,'' என்று மறுபடியும் புறா பறந்தது. வல்லூறால் அதைப் பின்தொடர முடியவில்லை.

தப்பித்தோம். பிழைத்தோம் என்று பறந்து வந்த புறா இளைப்பாறுவதற்காக, ஒரு மரத்தின் மேல் அமர்ந்தது.

வேட்டைக்காரன் ஒருவன் அன்று முழுவதும் வேட்டையாடி பல புறாக்களையும், வேறு சில பறவைகளையும் வேட்டையாடி, தன் கூண்டில் வைத்திருந்தான்.

மரத்தின் மேல் இருந்த மணிப் புறாவைக் குறிபார்த்து எய்ய அம்பை எடுத்தான்.

""வேடனே... என்னைக் கொன்று விடாதே... நான் உண்மையில் புறா அல்ல முனிவர்!''

புறா பேசுவதைக் கேட்ட வேடன், மிகவும் ஆச்சரியப்பட்டான். தன் வில்லைக் கீழே போட்டான்.

""முனிவரே! ஏன் புறாவாக மாறினீர்?''

""அது ஒரு பெரிய கதை. என்னை இப்போது மந்திரவாதி ஒருவன் வல்லூறாக மாறித் துரத்தி வருகிறான். எனக்கு அடைக்கலம் கொடு,'' என்றவாறே புறா அவன் காலடியில் விழுந்தது.

""இங்கே அந்த மந்திரவாதி வல்லூறு வரட்டும். நான் கவனித்துக் கொள்கிறேன். முனிவரே நான் பிடித்து வைத்திருக்கும் புறாக் களோடு கூண்டுக்குள் புகுந்து விடுங்கள்!''

முனிவர் புறாக்களோடு புறாக்களாகக் கலந்து விட்டார்.

அதே சமயம் மந்திரவாதி வல்லூறு அந்த இடத்திற்கு வந்தது.

""வேடனே...அந்தப் புறா எனக்குரியது''

""யார் நீ?''

""அதை உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.''

""அப்படியென்றால் புறா உனக்குக் கிடைக்காது!''

""அவன் என் எதிரி''

""விளக்கமாகச் சொல்!''

""சொல்ல முடியாது!''

""புறாவைக் கொடுக்க முடியாது... உனக்கு தெரிந்ததைப் பார்த்துக் கொள்!''

""நான் மீண்டும் மனிதனாகி, உன்னைக் கொன்று விடுவேன்.

""நான் இப்போது உன்னைக் கொல்லப் போகிறேன்,'' அம்பை எடுத்தான் வேடன்.

மந்திரவாதியான, வல்லூறு பறந்து விட்டது.

""முனிவரே... நீங்கள் இனி புறா உருத்தில் வெளியே செல்ல வேண்டாம். அது ஆபத்தில் முடியும். வேறு உருவத்தில் செல்லுங்கள்!''

முனிவருக்குத் திடீரென்று புலியின் உருவம் ஞாபகத்திற்கு வந்தது. புலி உருவம் எடுத்தார்.

இரவு முழுவதும் வேடனின் வீட்டுக் கூரையில் பதுங்கி இருந்த வல்லூறான மந்திரவாதி, ஒரு முரட்டுக் காளையின் உருவம் எடுத்தான். முனிவர் புலியின் உருவம் எடுத்தது அவனுக்குத் தெரியாது.

வீட்டிலிருந்து வெளியே வந்த புலியைக் கண்டதும், மந்திரவாதியான காளை தப்பித்து ஓட முயன்றது. காளையைப் புலி விரட்டியது. காளை வேகமாக ஓடியது. காற்று வேகத்தில் சென்ற புலி, காளை மீது தாவிப் பாய்ந்தது. தன் கூரிய நகங்களால் அதைக் கிழித்துக் கொன்றது.

இதற்கிடையில், முனிவரின் உடலைத் தீயிட்டுக் கொளுத்த அந்தக் குட்டிச் சாத்தான்கள் முயற்சி செய்து கொண்டிருந்தன. முனிவர் புலியில் இருந்து குட்டிச்சாத்தான்களிடையே புகுந்து உயிர் பெற்றார்.முனிவர் உயிருடன் எழுவதைக் கண்ட குட்டிச் சாத்தான்கள் பயந்து ஓடின.

முனிவர் விடவில்லை. அந்த ஏழு குட்டிச் சாத்தான்களையும் மறுபடியும். வவ்வால்களாக்கி மரத்தில் தொங்க விட்டார்.
***


நன்றி தினமலர் சிறுவர்மலர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.