தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற,நினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள்

 

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற,நினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள்:-


எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.

நாடிசுத்தி :-

உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும் அப்படியே செய்க.

1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்குத் துவாரத்தை அடைத்து இடது மூக்குத் துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது) மூக்குத் துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்குத் துவாரத்தை அடைத்து வலது மூக்கு வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்குத் துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் ஒரு தடவை (சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை செய்யலாம்.இதைக் காலை,மதியம் உணவுக்கு முன்,மாலையிலும் செய்து வர நல்ல நினைவாற்றல் ,மன ஒருமைப்பாடு ஏற்படும்.

பிராணாயாமம்:-

இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக மூச்சை உள்ளிழுத்து பின்னர் இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.

இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளைப் பெரிதாக்கி சுவாசம் நன்றாக நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதைச் சில தடவைகள் செய்து பின் படிக்க நன்கு மனதில் பதியும்.தேர்வுக்கு முன் ,நேர்முகத் தேர்வுக்குக் காத்திருக்கும் போது சில தடவைகள் செய்யப் பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.

சீத்காரி :-

சீதளம் என்றால் குளிர்ச்சி எனப்பொருள்.

பற்களைச் சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.

இரவில் முறையாக உறங்காமல் அதிக நேரம் கண்விழித்துப் படித்தால் கண் எரிச்சல்,உடற்சூடு,தலைசுற்றல் உண்டாகும்.தவிர்க்க முடியாத சூழல்களில் இந்தப் பயிற்சியை இடையிடையே செய்து படிக்க உறக்கம் வராது அதோடு நல்ல சுறுசுறுப்பும் சக்தியும் உண்டாகும்.

இந்தப் பயிற்சியை மழை மற்றும் பனிக்காலங்களில் அதிகம் செய்யவேண்டாம்.

தேர்வுக்கு முன் தேர்வு அறையில் செய்ய வேண்டிய பயிற்சி:-

தேர்வு தொடங்கும் முன் வினாத்தாள் கொடுத்ததும் கீழ்வரும் பயிற்சியைச் செய்ய மனதில் பயம்,பதற்றம் நீங்கி தெளிவு உண்டாகும் அதன் பின் விடைத்தாளில் பதில் எழுத ஆரம்பியுங்கள்.

பயிற்சி:-

மெல்ல மூச்சை உள்ளிழுத்து அடக்காமல் உடனே மெல்ல மூச்சை வெளிவிட்டு பின் 3 முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கி பின்னர் உள்மூச்சு இழுக்க வேண்டும்.இவ்வாறு ஒரு வெளிமூச்கிக்கும் உள்மூச்சுக்கும் இடையே 3 முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கி பின் உள்ளிழுக்கும் இந்த பயிற்சியை குறைந்தது 10 தடவை செய்து வர மனம் அமைதியாகும்.ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தெரிந்தும் நினைவுக்கு வராத சமயத்திலும் இதை குறைந்தது 3லிருந்து 5 தடவை செய்து பின் யோசிக்க விடை மனதில் உதிக்கும்.

முக்கிய குறிப்பு :-

நம் சரீரத்தில் சுவாசம் எப்பொழுதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வலது பக்கம் ,இடது பக்கம் என மாறி மாறி ஏதேனும் ஒரு மூக்குத் துவாரம் வழியாக இயங்கும்.

வலது பக்கம் சுவாசம் ஓடும் போது கடினமான கணிதம்(MATHS) , அறிவியல் (SCIENCE),புள்ளியியல்(STATISTICS) போன்ற பாடங்களைப் படிக்க எளிதில் விளங்கும்,மனதில் பதியும். வலதுபக்கம் சுவாசம் ஓடாத நேரங்களில் வலது கால் இடது கால் இருக்கும் படி போட்டுகொண்டு தரையில் அமர்ந்தோ,சேரில் அமர்ந்தோ படித்தாலும் அதே பலன் உண்டாகும்.

வல்லாரை லேகியம் சிறிதளவு தினமும் சாப்பிட்டு வர நல்ல நினைவாற்றல் உண்டாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.