மன்னிக்கவும் தெரிஞ்சவங்கதான் முழு மன ஆரோக்கியத்தோட வாழ முடியும்.

 

“இப்படி கவனம் இல்லாம ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே. இது தப்பு கோகுல். இருந்தாலும் உன்னை மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன் என்று மகனிடம் தன் மனைவி ரேவதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணேசன்.

 

ரேவதி இப்படிச் சொல்வது முதல்முறை அல்ல. சில வருடங்களாகவே அவள் கோகுலிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறாள்.

 

ஒருமுறை கோகுல் கணக்குப் பாடத்தில் தோல்வியடைந்தபோது இப்படித்தான் அவனைத் திட்டிவிட்டு, பிறகு அவனிடம் மன்னிப்பதாகச் சொன்னாள்.

 

படிக்காமல் விளையாடிவிட்டு வந்தாலும், வீட்டுப் பொருட்களைச் கைதவறி உடைத்தாலும் இப்படித்தான். முதலில் அவன் செய்தது தப்பு என்று கண்டித்துவிட்டு, பிறகு மன்னித்துவிடுவதாகச் சொல்லிவிடுவாள் ரேவதி.

 

ஏன் ரேவதி! கோகுல் செய்யுற தப்புகளை எப்படியும் மன்னிக்கத்தான் போறே. பிறகு எதுக்காக அவன்கிட்டே அது தப்புன்னு சொல்லித் தேவையில்லாம குற்ற உணர்ச்சியைத் தூண்டி விடுறே? - ரேவதியைத் தனியாக அழைத்து கேட்டான் கணேசன்.

 

கோகுல் இப்ப டீன்ஏஜ்ல இருக்கான். இனி மேற்படிப்பு, வேலைன்னு வாழ்க்கையில எத்தனையோ பேரைச் சந்திக்கப் போறான். எத்தனையோ சூழல்களை எதிர்கொள்ளணும். இப்ப அவன் செய்யுற தப்புகளை தப்புன்னு நாமதான் சுட்டிக் காட்டணும். அப்பதான் அதை இனி செய்யாம கவனமா இருப்பான். அதேநேரம் அவனை நாம மன்னிக்கிறோம்னு அவனுக்குத் தெரியணும்.

 


அப்பதான் மற்றவங்க அறியாம செய்யுற தப்புகளை அவன் மன்னிக்கவும் கத்துக்குவான். தப்பு செய்யாதவங்க மட்டுமில்லங்க, மற்றவங்களை மன்னிக்கவும் தெரிஞ்சவங்கதான் முழு மன ஆரோக்கியத்தோட வாழ முடியும். அதுக்காகத்தான் இந்தப் பயிற்சி! சொன்ன மனைவி ரேவதியை புருவம் உயர்த்தி மகிழ்ச்சியோடு பார்த்தான் கணேசன்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.