தனியார் மருத்துவ மனை கைவிட்டது அரசு மருத்துவ மனை காப்பாற்றியது!

 தனியார் மருத்துவ மனை கைவிட்டது அரசு மருத்துவ மனை காப்பாற்றியது! தோழர் த. ஜீவலட்சுமி!

தோழர் . ஜீவலட்சுமி :  இரவு எட்டு மணி. கட்டிலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். லேசாக மிக லேசாக ஒரு இருமல். குபுக்கென்று வாயிலிருந்து இரத்தம் கொட்டுகிறது. கையை வாய்க்குக் கொண்டு போய் கையில் படிவது இரத்தம் என உணர்ந்து கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து லேசாக இருமல் குபுக்குபுக்கென்று அறையில் இரத்தம் கொட்ட டாய்லெட் பேசன், தரை என ஏழெட்டு நிமிடங்கள் இடைவெளியின்றி சிறு இருமலோடு இரத்தம் கொட்டிப் பெருகுகிறது ஆடு அறுத்த இடமென. என்ன செய்கிறதென சொல்லவோ குடிப்பாட்டும் தண்ணீரை விழுங்கவோ இடைவெளியே இல்லை. உள்ளே என்னவோ நடந்து உயிர் போய்க் கொண்டிருக்கிறது என்ற நினைப்பில் அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு மூச்சை நன்றாக இழுத்து விட முயற்சிக்கிறேன். முடியவில்லை.

என் உயிரைத் தன் கைகளால் பற்றியது போல் கையை இறுகப் பிடித்துக் கொண்டே ஆட்டோ, தோழர்கள் என அழைக்கிறார். யாரும் வரும் வரை பிழைத்திருப்பேனா என்ற அச்சம் எனக்கு. பிழைத்து விட வேண்டும் என்ற ஆக்ரோசமும். கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில் வாயிலிருந்து இரத்தம் கொட்டுவது நின்று விட்டது. ஆனால் மூச்சு விட முடியவில்லை. மேல் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது.

'நான் நினைவோடு தான் இருக்கிறேன்.வண்டியை எடு' என வண்டியில் உட்காரவே வண்டியை ஓட்டும் மனதின் அச்சத்தை உடலில் உணர்ந்தேன். 'நான் steady இருக்கேன். நிதானமாக ஓட்டு' என சொல்லச் சொல்ல மூச்சு வாங்கவே குரல் கம்மியது. அப்படியே சாய்ந்து கொண்டேன்.

'ஜீவா'


'ம்ம். இருக்கேன்பா.போ' என்றபடியே

ஒருவழியாக திண்டுக்கல் GH அடைந்தோம்.

உடனடியாக அட்மிசன் போடத் தயாரானவர்கள் உடன் லேடி அட்டண்டர் தான் இருக்க முடியும் எனச் சொல்ல, இந்தக் கொரோனா காலத்தில் யாரையும் தொந்தரவு செய்யக் கூடாதென வழக்கமாகப் பார்க்கும் தனியார் மகப்பேறு டாக்டரிடம் போகிறோம். அவர் ஓபி முடித்துக் கிளம்பிவிட்டார்.

எனது இருமல், மூச்சிறைப்பு, உடையிலிருந்த இரத்தம் இதையெல்லாம் நர்சுகள் அந்த மருத்துவரிடம் போனில் சொல்லவே அவர் கொரோனா என உறுதி செய்து கொண்டு போன் எடுக்கவில்லை என சொல்லச் சொல்கிறார். அரை மணி நேரக் காத்திருப்பு வீண்.

தோழர்கள் கடுமையாக சண்டையிட்டபடியே அடுத்த மருத்துவமனைக்கு வண்டியை விடுகிறார்கள். அங்கும் கொரோனா அச்சம். அட்மிசன் மறுக்கப்பட்டது. என்னால் கொஞ்சம் மூச்சு விட முடிகிறது. GH போகலாம் என சொல்லி தோழர்.பாலாஜியின் இணையர் பாரதியை அழைத்ததும் தயக்கமுன்றி அவர் ஓடி வர அட்மிசன் போட்டு முதலில் ஒரு நரம்பு ஊசி. அடுத்தடுத்து சிகிச்சை தொடர்கிறது.

கொரோனாவாகவும் இருக்கலாம் என அவர்களுக்கும் சந்தேகம் தான். ஆனால் சிறு discrimination உணரமுடியாத சிகிச்சை. காலை 5.30 மணிக்கு மருத்துவர் ஸ்கேன் பார்த்து விட்டுச் சொன்னார். 'உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. தொடர்ந்து மூன்று மாதங்கள் வாந்தி எடுத்ததன் விளைவாக தொண்டை, வயிற்றுப் பகுதி புண்ணாவதால் கர்ப்பிணிகளுக்கு எப்போதாவது இப்படி நடக்கும். Blood loss, tension, cold இதனால் தான் உங்களால் மூச்சு விட முடியவில்லை. குழந்தை நன்றாக இருக்கிறது. என்றாலும் கோவிட் டெஸ்ட் எடுத்து விடலாம்' என்கிறார்.

அதன் பிறகு, மகப்பேறு மருத்துவர்கள் மூன்று வேளையும் உடல்நிலையைக் கவனித்துப் பார்த்துக் கொண்டனர். ஒரு நுரையீரல் மருத்துவர், இருதய மருத்துவர் என மூன்று நாட்களில் அத்தனை மருத்துவர்களின் ஆலோசனை,கவனிப்பு மற்றும் மருத்துவம்.

இதற்கிடையில் கொரோனா டெஸ்டும் வார்டில் வந்து எடுத்துச் சென்றனர். மகப்பேறு வார்டில் முகக்கவசம், கையுறை தவிர்த்து மருத்துவர்கள் வேறெந்த பாதுகாப்பு உபகரணங்களும் அணியவில்லை. ஒருவேளை எனக்குப் பாசிட்டிவ் என்றால் அவர்களுக்கெல்லாமும் பாதித்திருக்கும். ரிசல்ட் நெகட்டிவ். இன்னமும் இருமினால் சிறு இரத்தக் கட்டிகள் வருகின்றன. ஆனால் அவை வயிறு மற்றும் தொண்டைப் புண் காரணமாக வெளியேறும் சதைத்திசுக்கள். இன்று வீடு வந்துவிட்டோம். மருத்துவம் தொடர்கிறது. நலமாக இருக்கிறோம்.

மூன்று மாதத்தில் நாற்பதைம்பதாயிரம் வாங்கிய தனியார் மருத்துவமனை உயிராபத்தில் கைவிட்டு விட்டது. தொற்று காரணமாக மருத்துவம் பார்க்க மறுப்பது அவர்கள் தேர்வு என்றாலும் அதைச் செய்த விதம் சூது நிறைந்தது. மூச்சிறைத்துக் கொண்டிருக்கும் நான்கு மாத கர்ப்பிணியை இரத்தக் கறையோடு அரை மணி நேரம் காத்திருக்கச் செய்து பின் பித்தலாட்டம் பேசி அனுப்ப அப்படமான முதலாளித்துவ மனது வேண்டும். Accountability, ethics என்பதெல்லாம் ஊறுகாய்க்குக் கூட அவர்கள் தொட்டுக் கொள்ளாத விசயங்கள்.

அரசு மருத்துவமனைகளின் Accountability என்பது நம் சமூகத்தின் கூட்டு மன அறநிலையின் வெளிப்பாடு. அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவரிடமும் அந்த accountability இயல்பாக இருக்கிறது. அந்த இயல்பென்பது அரசுப் பள்ளி, கல்லூரி என துவங்கி நம் சமூகத்தில் நீண்ட social process மூலம் உருவாக்கப்பட்டிருக்கிற மகத்தான கட்டமைப்பு. அதைத் தகர்க்கத்தான் முதலாளிகள் சதி செய்கிறார்கள். முதலாளித்துவ அரசு அவர்களுக்கு இசைந்தாடுகிறது.

கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவப் போராளிகள் ஒருபுறமென்றால் ஒரே வளாகத்தில் நிரம்பி வழியும் கொரோனா வார்டை வைத்துக் கொண்டு மாஸ்க் மட்டுமே அணிந்து கொண்டு அன்றாடம் ஆயிரமாயிரம் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவ ஊழியர்கள் இன்னொரு புறம்.

இதனை முதலாளித்துவக் கட்டமைப்பால் எத்தனை கோடி கொடுத்தாலும் உருவாக்கிட முடியாது. இது தான் நம் பலம்.

இதனை தூய்மை அது இதுவென அற்பக் காரணங்களால் புறக்கணிப்போமானால் இந்தக் கட்டமைப்பு தகர்க்கப்படுவதை வேடிக்கை பார்ப்போமேயானால் வருங்காலத் தலைமுறையின் உயிர்வாழும் உரிமையைப் பறித்தவர்கள் ஆவோம்.

வாழ்க அரசு மருத்துவமனை ஊழியர்கள்!

வெல்க பொது சுகாதாரம்!

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.